ஈரான் அதிபர் தேர்தல் : வெற்றி பெற்ற மசூத் பிசிஷ்கியானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஈரான் பொதுத்தேர்தலில் மசூத் பிசிஷ்கியான் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரய்சி, அஜர்பைஜானிலிருந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வாரம் (ஜூன் 28) நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி, சுயேச்சையாகப் போட்டியிட்ட மசூத் பிசிஷ்கியானுக்கு 1.04 கோடி வாக்குகள் (44.40 சதவீதம்) கிடைத்தன.
சுயேச்சையாகப் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான சயீது ஜலீலிக்கு 94 லட்சம் வாக்குகள் (40.38 சதவீதம்) கிடைத்தன. இந்நிலையில், முதல் இரு இடங்களைப் பெற்றவர்களுக்கு இடையே 2-ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, மசூத் பிசிஷ்கியானுக்கும் சயீது ஜலீலிக்கும் இடையே இரண்டாவது கட்ட தோ்தல் நேற்று நடைபெற்றது. அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட தேர்தலில், சீர்திருத்தவாதியான மசூத் பிசிஷ்கியான் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர மதநிலைப்பாட்டைக் கொண்ட சயீது ஜலீலை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, ஈரானின் புதிய அதிபராக மசூத் பிசிஷ்கியான் விரைவில் பதவியேற்க உள்ளார்.
இதையும் படியுங்கள் : ஆசிரியருக்காக பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள் - தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
இந்நிலையில், மசூத் பிசிஷ்கியானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "நம் மக்களின் நலனுக்காவும், இந்த பிராந்தியங்களின் நலனுக்காவும், நெடுங்காலமாக இருந்து வரும் இருநாடுகளின் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்காக மசூத் பெசஷ்கியானுடன் நெருக்கமாகப் பணிபுரிய எதிர்பார்கிறேன்"
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Congratulations @drpezeshkian on your election as the President of the Islamic Republic of Iran. Looking forward to working closely with you to further strengthen our warm and long-standing bilateral relationship for the benefit of our peoples and the region.
— Narendra Modi (@narendramodi) July 6, 2024