For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் நாளை பிரதமர் மோடியின் வாகன பேரணி: பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

10:19 AM Apr 08, 2024 IST | Web Editor
சென்னையில் நாளை பிரதமர் மோடியின் வாகன பேரணி  பாதுகாப்பு பணிகள் தீவிரம்
Advertisement

பிரதமா் நரேந்திர மோடி நாளை சென்னையில் வாகன பேரணி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதை தொடர்ந்து,  ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,  வேட்பாளர்களை அறிவித்து,  தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில்,  தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

முன்னதாக அரசு நிகழ்ச்சிகள்,  புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்,  தொடங்கி வைத்தல்,  கட்சிப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு 5 முறை வருகை தந்தார்.  இந்நிலையில் 6-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு வர உள்ளார்.  மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டில் இது பிரதமர் மேற்கொள்ளும் இறுதிக்கட்ட பிரசாரமாக அமையும் என கருதப்படுகிறது.

பிரதமர் மோடி மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு,  அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறாா்.  சென்னை விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை காமராஜா் அரங்கம்,  ஜி.என்.செட்டி சாலை வழியாக பனகல் பூங்கா செல்கிறாா்.  அங்கு புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் அலுவலகம் முன்பு பிரதமர் மோடிக்கு பாஜக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.  இதனைத் தொடா்ந்து பனகல் பூங்கா முதல் பாண்டி பஜாா் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை வாகன பேரணி பிரசாரத்தில் பிரதமா் மோடி ஈடுபடவுள்ளாா்.

பிரதமர் மோடி பாஜக வேட்பாளா்கள் தமிழிசை சௌந்தரராஜன் (தென்சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை),  பால்.கனகராஜ் (வட சென்னை) ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளாா்.  இதனையடுத்து நாளை இரவு ஆளுநா் மாளிகையில் அவர் தங்குகிறார்.

பின்னர் ஏப்.10 ஆம் தேதி காலையில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் செல்கிறாா்.  அங்கு அவர் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளார்.  இந்த பிரச்சார பொதுக்கூட்டம் வேலூா் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதனையடுத்து  அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு காலை 11.30 மணிக்கு வரும் அவா்,  அங்கிருந்து கோவை சூலூா் விமானப் படை தளத்துக்கு விமானத்தில் செல்கிறாா். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்று,  நீலகிரி பாஜக வேட்பாளா் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.   அதன்பிறகு சூலூா் விமானப் படை தளத்துக்கு திரும்பும் பிரதமா்,  மகாராஷ்டிர மாநிலத்துக்கு விமானத்தில் செல்கிறாா்.

பிரதமா் மோடியின் வருகையையொட்டி சென்னை தியாகராய நகாில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிரதமர் மோடியின் வாகன பேரணி செல்லும் பகுதி முழுவதும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று சோதனை செய்தனா்.  அந்தப் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருப்பவா்களின் விவரங்களைச் சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் குறித்த தகவல்களையும் சேகரிக்கின்றனா்.

சென்னையில் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது.  இதையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தியாகராய நகா் பகுதி,  பிரதமா் தங்கும் கிண்டி ஆளுநா் மாளிகை ஆகிய பகுதிகளில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிரதமரின் வாகன பேரணியையொட்டி, சென்னையில் 22,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

Tags :
Advertisement