கோவையில் தொடங்கியது பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணி!
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிரமாண்ட வாகனப் பேரணி தொடங்கியது.
பாஜக சார்பில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். கர்நாடக மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவையில் பாஜக வாகன பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தொலைவிற்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி கோவையில் முதன் முறையாக நடைபெறுகிறது. பேரணி வாகனத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தொண்டர்கள் அண்னாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பிரதமரின் வருகையை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை சாய்பாபா காலனியில் இருந்து தொடங்கும் வாகனப் பேரணி, கங்கா மருத்துவமனை, வடகோவை, சிந்தாமணி வழியாக சென்று இறுதியாக ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைகிறது. ஒரு மணிநேரம் நடைபெறும் பேரணி, ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைகிறது. அங்கு குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார்.
இரவு கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கும் பிரதமர் மோடி, நாளை (மார்ச் 19) காலை கேரளா புறப்படுகிறார். கேரள மாநிலம் பாலக்காட்டில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் தமிழ்நாடு வருகிறார். சேலத்தில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.