விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே அவமானமாகும் - செல்வப் பெருந்தகை விமர்சனம்!
மே 30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல, இந்தியாவிற்கே அவமானமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார் அவர் தெரிவித்ததாவது..
“ 2024 மக்களவைத் தேர்தல் இறுதி பரப்புரை முடிந்து, மே 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்து, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்வதென நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார். இறுதிகட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருக்கிறார். இது ஒரு அரசியல் மோசடி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
விவேகானந்தர் உரையாற்றும் போது, ‘உலகில் அனைத்து மதங்களாலும் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும், அகதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்த ஒரு தேசத்தைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டதை எவரும் மறந்திட இயலாது. தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிய தனிவிதமான, பிரத்யேகவாதப் பார்வையைக் கொண்டவர்களை ஏளனம் செய்த விவேகானந்தர், “தான் சார்ந்திருக்கும் மதம் ஒன்று மட்டும்தான் நிலைத்திருக்க வேண்டும். மற்ற மதங்கள் அழிந்துவிட வேண்டும் என்று எவராவது கனவு கண்டால், அவருக்காக நான் என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து பரிதாபப்படுகிறேன்” என்று கூறினார்
சுவாமி விவேகானந்தர் தமது உரையை நிறைவு செய்கிற போது, ‘ஒருவருக்கு நல்லிணக்கமும், அமைதியும் மட்டுமே தேவைப்படுகிறது. வேற்றுமை அல்ல என்றும், இதை ஒவ்வொரு மதத்தின் பதாகையிலும் எழுதப்பட வேண்டும்” என்று மோடிக்கு உரைக்கிற மாதிரி 131 ஆண்டுகளுக்கு முன்பு பேசியவர் சுவாமி விவேகானந்தர்
குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திரமோடி இருந்தபோது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்டபோது, ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல கண்டும் காணாமல் இருந்தவர் தான் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி.
ஆன்மீக மாண்புகளை மீறி மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆரோக்கியமற்ற விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிட்ட நரேந்திர மோடி, ஆன்மீக ஞானக்கடல் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வது என்பது ஏமாற்று நாடகம். சுவாமி விவேகானந்தரின் போதனைகளை ஏற்று அவரைப் போற்றுபவர்கள் எவரும் நரேந்திர மோடியின் தியான முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சுவாமி விவேகானந்தரை இழிவுபடுத்துகிற முயற்சியில் ஈடுபட்டு அதன்மூலம் இந்து மதத்திற்கே களங்கம் கற்பிப்பவராக நரேந்திர மோடியின் தியான நாடகம் அமைந்திருக்கிறது. இது அரசியல் நோக்கம் கொண்டதே தவிர, ஆன்மீக நோக்கம் கொண்டதல்ல.
மே 30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல. இந்தியாவிற்கே அவமானமாகும். நரேந்திர மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தன்னந்தனியாக தியானம் செய்கிற மூன்று நாட்களும் அங்கு சுற்றுலா பயணிகள் எவரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்
இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒரு பிரதமரே அப்பட்டமாக மீறுகிற செயலாகும். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தியானம் மேற்கொள்கிற நடவடிக்கைக்குத் தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாதென்று தமிழ்நாடு தலைமைக் காவல்துறை அதிகாரியிடமும் நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம்.” என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.