தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து, பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை (ஏப்.4) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று (ஏப்.3) டெல்லியில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து புறப்பட்டார்.
அங்கு அவருக்கு இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் தாய்லாந்து அரசு இல்லத்தில் அந்நாட்டு பிரதமர் ஷினவத்ராவை, பிரதமர் மோடி சந்திக்கிறார். அங்கு அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாளை நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்கிடையே, தாய்லாந்து மன்னர் மகா விஜிரலோங்கோர்ன், ராணி சுதிடா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் பிரதமர் மோடியும், தாய்லாந்து பிரதமர் ஷினாவத்ராவும் தாய்லாந்தின் சிறந்த 6 கோயில்களில் ஒன்றான வாட்போவை பார்வையிடுகிறார்கள்.