For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போனதால் சிஏஏ-வை அமல்படுத்தி கரையேற  முயற்சிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

09:12 PM Mar 11, 2024 IST | Web Editor
“அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போனதால் சிஏஏ வை அமல்படுத்தி கரையேற  முயற்சிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி ”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சனம்
Advertisement

அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போனதால் சிஏஏ-வை அமல்படுத்தி கரையேற  முயற்சிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

Advertisement

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு இன்று (மார்ச் 11) அறிவித்தது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:

குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது மத்திய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CitizenshipAmendmentAct) -ஐ இயற்றியது மத்திய பா.ஜ.க அரசு.

அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.

திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.

அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags :
Advertisement