மக்களவை தாக்குதல் விவகாரம் குறித்து மௌனம் கலைத்த பிரதமர் நரேந்திர மோடி!
நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அதேநேரம் ஒரு தீவிரமான பிரச்சினை என பிரதமர் நரேந்திர மோடி பேட்டியளித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் இரு இளைஞர்கள் பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை எம்.பி.க்கள் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அது போல, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் இருவர் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நீலம் தேவி, அமோல் ஷிண்டே, சாகர், மனோரஞ்சன் ஆகிய நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான லலித் ஜா புது டெல்லியில் வியாழக்கிழமை (டிச. 14) இரவு கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த பிரதமர் மோடி தற்போது மௌனம் கலைத்துள்ளார். தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்த பிரதமர் "நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அதேநேரம் ஒரு தீவிரமான பிரச்னை. இந்த சம்பவம் குறித்து வாதிடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் பதிலாக, பிரச்னையை ஆழமாக கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
இதன் தீவிரத்தை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிரமான மற்றும் ஆழமான விசாரணையை நடத்தி வருவதாகவும், தாக்குதலுக்கான காரணத்தை விரைவில் கண்டுபிடிப்பார்கள். இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரித்து, இனி இதுபோல் நடக்காத வகையில் தீர்வு காண வேண்டும். சதி அம்பலப்படுத்தப்படும் என அனைவரும் நம்புகிறோம்" என பிரதமர் மோடி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.