பிரதமர் மோடி வருகை : ராமேஸ்வரம் பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு தடை!
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் பகுதிகளில் பொது போக்குவரத்து தடை செய்யப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து நாளை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்கிறார். பின்னர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் செல்ல உள்ளார். இதனையொட்டி இந்த மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களுக்கு ராமேஸ்வர பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்படும் மாற்றங்களின் விவரங்கள்:
20ஆம் தேதி அன்று மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராமேஸ்வரம் நகர் பகுதியிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
21ஆம் தேதி ராமேஸ்வரம் நகரில் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்களுக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி சுற்றுலா தலத்திற்கு போக்குவரத்து வழி மாற்றம் தொடர்பான விவரங்கள்:
20 ஆம் தேதி நண்பகல் 12:00 மணி முதல் 21 ஆம் தேதி நண்பகல் 12:00 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அருள்மிகு ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசன மாற்றம் குறித்த விவரம்:
20ஆம் தேதி காலை 08:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நலன் கருதி ராமேஸ்வரம் நகரம் முழுவதும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ட்ரோன் கேமரா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்களும், பொதுமக்களும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார் .