பிரதமர் மோடியின் 2 நாள் தமிழ்நாடு பயணம்: தூத்துக்குடி முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை!
மாலத்தீவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வருகை தந்தார். தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அவருக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன் மற்றும் ராம் மோகன் நாயுடு, அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் அதிமுகவைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். தூத்துக்குடியில் இரவு 8.30 மணியளவில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், நிறைவடைந்த சில திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நிகழ்ச்சிகள் முடிந்ததும், இரவு 9.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். ஜூலை 27-ம் தேதி காலை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அங்கு நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்கிறார்.
இதனை தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பங்கேற்ற பிறகு, திருச்சி விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லிக்கு தனி விமானம் மூலம் புறப்படுவார்.