For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா: கடிதம் எழுதிய பிரதமர் மோடி - நன்றி தெரிவித்த முதலமைச்சர் #MKStalin!

08:58 AM Aug 18, 2024 IST | Web Editor
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா  கடிதம் எழுதிய பிரதமர் மோடி   நன்றி தெரிவித்த முதலமைச்சர்  mkstalin
Advertisement

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சார்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். அதன் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 18) மாலை 6.50 மணியளவில் நடைபெறவுள்ளது.

விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்தவுள்ளார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கவுள்ளார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். விழாவில், தமிழக அமைச்சர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ”2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை உதவும். அரசியல், இலக்கியம், சமூகப் பணிகளில் அளப்பரிய பங்காற்றியுள்ளார் கலைஞர்.நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் அவர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது. கருணாநிதி இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தில் ஒரு உயர்ந்த ஆளுமை. தமிழகத்தின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார்.

ஒரு அரசியல் தலைவராக, சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை அடிக்கோடிட்டுக் காட்டி, பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கருணாநிதி. பன்முகத் திறமைகளை உடைய ஆளுமையாகத் திகழ்ந்த கருணாநிதி தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்க்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகளால் பிரகாசித்தது மற்றும் அவருக்கு ‘கலைஞர்’ என்ற அன்பான பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

இந்த நினைவு நாணயம் வெளியிடப்படும் நிலையில், கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவர் நிலைநிறுத்தப்பட்ட இலட்சியங்களைப் போற்றுவதாகவும் அமைந்துள்ளது. இந்த நாணயம் அவரது மரபு மற்றும் அவரது பணியின் நீடித்த தாக்கத்தை நினைவூட்டுவதாக இருக்கும். இந்த முக்கியமான தருணத்தில், கருணாநிதிக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனைகளும் தேசத்தின் பயணத்தைத் தொடரும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடைய தனது அன்பான வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement