ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பிரதமர் மோடி இன்றிரவு நாட்டு மக்களிடம் உரை!
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர், பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம், அமைச்சரவைக் கூட்டம், ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஆகியவை நடைபெற்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் விளைவாக பாகிஸ்தான் உடனான சிந்து ஒப்பந்த ரத்து உள்ளிட்ட பல நடவடிக்கைகள் பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இதில் 15 பொது மக்கள் மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது உயர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியாது. இருப்பினும் மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயார் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து இன்று(மே.12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். ஏற்கெனவே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டு மக்களிடம் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.