இந்தியா - அமெரிக்கா உறவு பற்றிய டிரம்பின் கருத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி இந்தியப் பொருட்களின் மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்தது.
இதனை தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்காகச் சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், நான் எப்போதும் மோடியுடன் நண்பர்களாக இருப்பேன், அவர் ஒரு சிறந்த பிரதமர். இந்தியாவும் அமெரிக்காவிற்கும் ஒரு சிறப்பு உறவு உள்ளது. நான் மோடியுடன் நன்றாகப் பழகுகிறேன். எப்போதாவதுதான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன் என தெரிவித்துள்ளார். எனினும், இந்தியாவையும் ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து டிரம்பின் கருத்தை வரவேற்கும் வகையில் பிரதமர் மோடி ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனாதிபதி ட்ரம்பின் உணர்வுகள் மற்றும் எங்கள் உறவுகளை நேர்மறையான மதிப்பீடு ஆகியவற்றை ஆழமாக பாராட்டவும், முழுமையாகவும் பரிமாறிக் கொள்ளுங்கள். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் முன்னோக்கி பார்க்கும் விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.