‘சாவா’ திரைப்படத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு!
பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாவா'. சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தை லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ளார். மேடாக் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏர்.ஆர். ரஹ்மான் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி இதுவரை ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இப்படத்தை பாராட்டியுள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 98வது அகில் பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “மராத்தி படங்களோடு இந்தி சினிமாவை உயர்த்தியது மகாராஷ்டிராவும் மும்பையும் தான். அந்த வரிசையில் இப்போது ‘சாவா’ படம் அலையை ஏற்படுத்தி வருகிறது. சிவாஜி சாவந்தின் மராத்தி நாவல் மூலம்தான் சாம்பாஜியின் வீரம் நமக்கு அறிமுகமானது” என்று பாராட்டியிருந்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடியின் பாராட்டுக்கு தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவத்தின் இன்ஸ்டாகிராம் பதிவில், “வரலாற்று பெருமை, பிரதமர் மோடி சாவா படத்தை பாராட்டி, சத்ரபதி சம்பாஜியின் தியாகத்தையும் மரபையும் கௌரவிப்பது பெருமைக்குரிய ஒரு தருணம், நன்றி” என்று குறிப்பிட்டுள்ளது.