"மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை" - சோனியா காந்தி!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசியதாவது,
"மக்களின் எண்ணம் தற்போது நம் பக்கம்தான் உள்ளது. மக்களவைத் தேர்தலின்போது மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட நற்மதிப்பு மற்றும் உறுதித்தன்மையை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கிடைத்திருப்பதை நினைத்து நாம் மனநிறைவு அடையக் கூடாது. அதீத நம்பிக்கையும் வேண்டாம், நாம் மிகச் சிறப்பாக செயல்பட்டால், நிச்சயம் அது அரசியலில் எதிரொலிக்கும்.
உதாணரமாக மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொள்ளலாம். தேசிய அரசியலிலும் நிச்சயம் மாற்றம் ஏற்படும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மக்களை இனரீதியாக பிரிப்பது மற்றும் மக்களிடையே அச்சம் மற்றும் வன்முறையை பரப்புவது போன்ற கொள்கைகளை மாற்றிக்கள்ளவில்லை. கான்வர் யாத்திரையின் வழிப்பாதைகளில் இருக்கும் உணவகங்கள், உரிமையாளர்களின் பெயரை வெளியிட வேண்டும்.
உத்தரப்பிரதேச மற்றும் உத்தரகண்ட் அரசுகள் வெளியிட்ட அறிவிப்பை நல்லவேளையாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு சரியான நேரத்தில் நிறுத்தியது. ஆனால், இது வெறும் தற்காலிகமானது தான். நாட்டில் உள்ள நான்கு மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கட்சித் தலைவர்கள், தற்போது பெற்றிருக்கும் நன்மதிப்பை நீடிக்கவும், மக்களிடையே நம்பிக்கையை பெறவும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்."
இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.