பிரதமர் மோடிக்கு ஐக்கிய அமீரகத்தில் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு!
ஐக்கிய அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆட்சி காலம் நிறைவடைய உள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய INDIA – கூட்டணியும் கடுமையான போட்டிக்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (பிப்.13) ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலையும் அவா் திறந்து வைக்க உள்ளாா். கடந்த 2015-ம் ஆண்டுமுதல் தற்போது வரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமா் மோடி 7-வது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.