“பிரதமர் நரேந்திர மோடி இந்து அல்ல...” - லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்!
பிரதமர் மோடி இந்து அல்ல என பீகார் மாநிலம் ஜன் விஸ்வாஸ் பேரணியில் பேசிய லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளை நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. அந்த வகையில், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜன் விஸ்வாஸ் என்ற பெயரில் தோழமை கட்சிகளை இணைத்துக் கொண்டு மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். கடந்த மாதம் 20-ம் தேதி அம்மாநிலம் முசாபர்பூரில் இருந்து தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பேசிய ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், “பீகார் பல சிறந்த ஆளுமைகளை அளித்துள்ளது. இதே காந்தி மைதானத்தில், நாட்டின் பெரிய தலைவர்கள் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தியுள்ளனர். இங்கிருந்து நாடு முழுவதும் ஒரு செய்தி சென்றது. பீகாரின் கருத்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. பீகார் என்ன முடிவு எடுக்கிறதோ அதையே நாட்டு மக்கள் பின்பற்றுகிறார்கள். நாளை கூட அதுதான் நடக்கப்போகிறது. பிரதமர் மோடி இந்து அல்ல. அவரது தாய் இறந்தபோது அவர் தனது தலை முடியை எடுக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது” என லாலு பிரசாத் யாதவ் விமர்சித்து பேசினார்.