திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி - 10 லட்சம் பேரை திரட்ட பாஜகவினர் திட்டம்!
பிரதமர் மோடி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் ஜன.18-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அதன் பின் 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார்.
இதனிடையே பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்துள்ள சாதனைகள் குறித்தும், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்தும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் 18ம் தேதி தமிழ்நாடு வருகிறார். இதன் மூலம் 2024ம் ஆண்டில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். இப்பயணத்தின் போது திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக தனி நபர் மசோதா தாக்கல் செய்தார் திமுக எம்.பி. வில்சன்!
திருப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி ஜனவரி 28-ம் தேதி நடத்த பாஜக திட்டமிட்டு இருந்த நிலையில், பிரதமர் வருகையால் தற்பொழுது வருகிற பிப்ரவரி 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடத்துவதற்காக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் எதிரில் 400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள முட்செடிகள், புதர்களை அகற்றி மண் சமநிலைப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணி நிறைவடைய உள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா மற்றும் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் விரைவில் திருப்பூர் வருகை தர உள்ளனர்.
அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை சுற்றி பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.