பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
பாம்பன் பழைய ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணத்தால், 2022 டிசம்பர் 22ஆம் தேதியுடன் பாம்பன் பாலத்தின் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரூ.544 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவுபெற்றது.
மண்டபம் - பாம்பன் இடையே கடலுக்குள் கட்டப்பட்ட இந்த புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாளை முதல் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து பாசஞ்சர் ரயில்கள், விரைவு ரயில்கள், வாராந்திர ரயில்கள் என அனைத்து ரயில்களும் இயக்கப்பட உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து மதுரை, சென்னை, திருப்பதி, ஒகா, அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் இயக்கப்பட உள்ளது. பாசஞ்சர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என ராமேஸ்வரத்தில் இருந்து 28 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்களுக்கு பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.