"கொரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து பிரதமர் மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளார்" - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
கொரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து பிரதமர் மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், 49 தொகுதிகளில் கடந்த 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.
இதையடுத்து, 6ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து பிரதமர் மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம் கொட்டா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது, "நீங்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டீர்களா? நானும் செலுத்திக்கொண்டேன். எனக்கு முதலில் அதில் விருப்பமில்லை. ஆனால், தற்போதுதான், அந்த தடுப்பூசியில் பிரச்னை இருப்பதாகவும், அதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
உடல்நலத்துடன் இருந்த பலர் மரணமடைந்துள்ளனர். இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உங்களுக்கு நினைவிருக்கிறதா? கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்தது.
ஆனால் அது தற்போது நீக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து பிரதமர் மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றக் கொண்டார். மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலை உறுதித் திட்டத்தை காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்தது. முதலில் கிராமப்புறங்களில் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் பிறகு நகர்ப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. நகரங்களிலும், ஒரு மனிதன் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வாய்ப்புப் பெறுவது அவர்களது உரிமை என்ற அடிப்படையில் அந்த திட்டம் நகரங்களுக்கும் கொண்டுவரப்பட்டது.
ஆனால், இந்த ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிடிக்கவில்லை. நாடாளுமன்றத்தில், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு எதிராக அவர் பேசிய வீடியோவை வேண்டுமானாலும் நீங்கள் கேட்டுப்பார்க்கலாம். அவர் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்கவே நினைத்தார். பிறகுதான் அவருக்குத் தெரிய வந்தது, மக்கள் இந்த திட்டம் முடக்கப்படுவதை விரும்பவில்லை என்பது. எனவே அதனை முடக்காமல், அவரது ஆட்சிக்காலத்தில் படிப்படியாக ஊரக வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்திவிட்டார்."
இவ்வாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.