“பாஜகவிற்கு தடை காங்கிரஸ் திமுகதான்” - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!
“பாஜகவிற்கு, காங்கிரஸும் திமுகவும் தான் தடையாக உள்ளது” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
இதையும் படியுங்கள் : மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!…
பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது :
"2024 மக்களவைத் தேர்தலை வழக்கமான தேர்தலாக நினைக்க கூடாது. 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்குப்பிறகு இன்னொரு தேர்தல் வருமா? வராதா என்ற கவலை எனக்கு இருக்கிறது. சுதந்திரம் இருக்கும் போதுதான் சுதந்திரத்தை காப்பாற்ற முடியும் ஜனநாயகம் இருக்கும்போது தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். உயிர் போன பிறகு
உயிரை காப்பாற்ற முடியாது. உங்களை எச்சரிக்க விரும்புகிறேன்.
பாஜகவை மற்றும் நரேந்திர மோடியை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்.
மன்மோகன் சிங் வாஜ்பாய் கூட பிரதமராக இருந்துள்ளனர். அவர்கள் பொறுப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி மக்களுக்கு பல நன்மைகளை செய்தார்கள். நன்மைகள் செய்த போது சில தவறுகள் நடந்திருக்கலாம் ஆனால், நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நன்மை செய்வது அவருடைய நோக்கமில்லை.
பாஜகவிற்கு தடை திமுகவும் காங்கிரஸ்ம்தான் அதனால்தான் காங்கிரஸ் கட்சியை
ஒழிக்க வேண்டும், மாநில கட்சிகளை ஒடுக்க வேண்டும், இந்தியா முழுவதில் வெற்றி பெற முடியும் என பாஜக நினைக்கிறது.
இரண்டு முதலமைச்சர்களை கைது செய்திருக்கிறார்கள், அமைச்சர்களை கைது செய்து இருக்கிறார்கள். சினிமாவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. தேர்தல் எதற்கு, சட்டமன்றம் எதற்கு, ஆளுநர் எதற்கு, முதலமைச்சர் பதவி எதற்கு, மத்திய அரசு கைது செய்து முதலமைச்சரை சிறையில் அடைக்குமா ஜனநாயகம் எப்படி பிழைத்திருக்கும்
என்றும் பத்தாண்டு மோடி அரசும் பத்தாண்டு அதிமுக அரசும் இருந்தது மூன்றாண்டு திமுக அரசு இருந்தது ஒப்பிட்டு பாருங்கள். காங்கிரஸ்தான் 60,000 கோடி விவசாய கடன் ரத்து செய்தது. விவசாய காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது. நாளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.
பேரிடர் நிதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒரு காசு கூட
வெள்ள நிவாரணத்திற்கு தரவில்லை. பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை. கச்சா எண்ணெய் 60 டாலருக்கு குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலை ரூ. 103,
டீசல் விலை ரூ.93 இதன் மூலம் ஆண்டொன்றுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி வரை பிரதமர் மோடி சலுகைகள் வழங்கியுள்ளார். மக்களின் வியர்வை ரத்தத்தை உறிஞ்சி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் வழங்குகிறார்"
இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.