பிரதமர் மோடி விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்காக அர்ப்பணித்தார்!
கேரளா மாநிலம் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ. 8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் திறப்பு விழா இன்று(மே.2 நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மற்றும் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்காக அர்ப்பணித்த பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, “ இந்த துறைமுகம் இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது. இது கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும்.
ஒரு பக்கம் ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் பெரிய கடல் உள்ளது. மறுபக்கம், இயற்கையின் அழகு உள்ளது. இடையில், இந்த விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் புதிய யுக வளர்ச்சியின் அடையாளமாக அமைந்துள்ளது.
பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்தும் வகையில் இந்த துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் துறைமுகம் இருக்கிறது. இதுவரை இந்தியாவின் 75 சதவீத டிரான்ஷிப்மென்ட்-கள் வெளிநாட்டு துறைமுகங்களில் நடத்தப்பட்டன. அதனால் நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது வெளிநாடுகளுக்கு செலவிடப்பட்ட நிதி நாட்டின் வளர்ச்சிக்குச் செலவிடப்படும். விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.