ராமரிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி..! - திருச்சியில் திருமாவளவன் எம்.பி. விமர்சனம்
‘எங்களுக்கும் ராமர் உண்டு, அவர்தான் பெரியார்’ என்று திருச்சி மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘வெல்லும் சனநாயகம்’ என்ற மாநாட்டை திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடத்தியது. திருமாவளவனின் மணிவிழா, கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, ‘இந்தியா கூட்டணி’யின் வெற்றிக் கால்கோல் விழா என்று முப்பெரும் விழாவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த மாநாட்டை நடத்தியது. இதில், சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது :
“இந்த மாநாட்டை வெற்றிபெற வைத்த அனைவருக்கும் கண்ணீர் துளிகளால் நன்றி தெரிவிக்கிறேன். திருச்சியை நம்முடைய வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மாநாடு வெற்றிபெற்று விட்டது. மாபெரும் வெற்றி. இந்த மாநாடு பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார், சனாதன சக்திகளுக்கு எதிரான மாநாடு. இது சிறுத்தைகளின் மாநாடு. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். இந்த மாநாட்டின் விழா நாயகன் அரசியலமைப்பு சட்டம் தான்.
மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற மோசடி கும்பலிடம் நாடு சிக்கிக்கொண்டது. 10 ஆண்டுகளில் என்ன செய்தார்கள். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என கூறினார். செய்யவில்லை. அயல் நாட்டு வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் போடுவேன் என கூறினார். வரவில்லை. அதானிக்கும் அம்பானிக்கும் சேவை செய்வதுதான் 10 ஆண்டுகளில் மோடி செய்த சாதனை. ஏழை மக்கள் வாங்கும் கடன் தள்ளுபடி செய்யவில்லை. அம்பானி, அதானி கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். அதானி ஏர்போர்ட், அதானி டெர்மல் என எல்லாமே அதானி, அம்பனிக்குத்தான்.
என்னுடைய அப்பாவின் பெயரும் ராமசாமி தான். தந்தை பெரியாரின் பெயரும் ராமசாமி தான். எங்களுக்கும் ராமர் உண்டு. அவர்தான் பெரியார். நாங்கள் ராமரை எதிர்க்கவில்லை. அந்த அரசியலைதான் எதிர்க்கிறோம். ‘ஜெய் டெமாகிரசி’ என்பதுதான் சரியாக இருக்கும்.
ராமரிடம் கீழே விழுந்து மோடி மன்னிப்பு கேட்டார். ‘நான் அரசியல் செய்கிறேன். கோயிலை வைத்து அரசியல் செய்கிறேன். என்னை மன்னித்து விடு’ என அவர் மைண்ட் வாய்ஸில் பேசியது எனக்கு கேட்டது. நீங்கள் நினைக்கும் களம் அல்ல தமிழ்நாடு. இது சிறுத்தைகளுக்கான களம். ‘வெல்லும் சனநாயகம்’.”
இவ்வாறு திருமாவளவன் எம்.பி. உரையாற்றினார்.