“தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க பிரதமருக்கு மனமில்லை..!” - முரசொலி விமர்சனம்
குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே நிதி அறிவித்த பிரதமருக்கு, ஒருமாதமாகியும் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மனமில்லை என்று முரசொலி நாளேடு விமர்சனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், திருச்சிக்கு வந்த பிரதமர் மோடி, வெள்ள நிவாரணத்துக்காக தமிழ்நாடு வைத்த எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை என கூறியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட 900 கோடி ரூபாயானது மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய தவணை தானே தவிர, தற்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக வழங்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ளது.
குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே நிதியை அறிவித்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை சென்று பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசிடம் பேரிடர் நிவாரணத் தொகையாக 68 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இருக்கும்போதிலும், அதிலிருந்து தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்க பிரதமர் மோடிக்கு மனமில்லை என்று முரசொலி நாளேடு விமர்சனம் செய்துள்ளது.
இதையும் படியுங்கள் : 33வது சியோல் மியூசிக் அவார்ட்ஸ் - BTS, BLACKPINK-க்கு விருது...!
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள முரசொலி, தமிழ்நாட்டை புறக்கணித்து வரும் பிரதமர் மோடிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளது.