பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் ஜான் ஜெபராஜ் - சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு!
கோவையைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ்(37) அங்குள்ள கிங் ஜெனரேஷன் தேவாலயத்தில் பாதிரியராக செயல்பட்டு வருகிறார். இவர் கிறிஸ்தவ சமூக மக்கள் மத்தியில் ஏராளமான கிறிஸ்தவ பாடல்கள் பாடி பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த ஒரு விருந்து ஏற்பாடு செய்ததாகவும், அதில் பங்கேற்ற 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் அளித்த புகார் அளித்த நிலையில் அவர் மீது கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ஜான் ஜெபராஜை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.
அதன் முன் முயற்சியாக ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பி செல்லாதவாறு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு காவல்துறையினரால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பபட்டது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள பாதிரியார் ஜான் ஜெபராஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் தூண்டுதலின்பேரில் தனக்கு எதிராக சிறுமிகளை பயன்படுத்தி குற்றம்சாட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதில் அவர், குற்றச்சாட்டை மறுத்ததோடு காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியுள்ளார். அத்துடன் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.