2026-ல் தமிழகத்தின் முதல்வராக தலைவர் விஜய்யை உட்கார வைக்க வேண்டும் - புஸ்ஸி ஆனந்த்...!
2026-ல் தமிழகத்தின் முதல்வராக தலைவர் விஜய்யை உட்கார வைக்க வேண்டும் என தமிழக வெற்றி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் பொசிஷனில் இருப்பவர் நடிகர் விஜய். இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குகிறார். இந்த படத்தை தொடர்ந்து, மற்றொரு படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ள நடிகர் விஜய். அதுதான் தனது கடைசி படமாக இருக்கும். அதன் பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்து விட்டார்.
கடந்த 2ம் தேதி, தமிழக வெற்றி கழகம் என தனது கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்ததற்கு முக்கிய காரணம், எங்கள் கட்சியின் இலக்கு 2026ம் ஆண்டில் நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தல்தான் என்றும் முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தி விட்டார்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பாக சென்னையில் நேற்று இரவு 11.00 மணி அளவில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியை மேம்படுத்த நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு:
விஜய் மக்கள் இயக்கம் எப்படி செயல்பட்டதோ அதேபோல் தமிழக வெற்றி கழகமும் பொதுமக்களின் சேவையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகி, மாவட்ட செயலாளர்களும் எதற்கும் பயப்பட வேண்டாம். உங்கள் ஒவ்வொருவருக்குள் தலைவர் விஜய் இருக்கிறார். பொதுமக்களின் சேவைக்கு எது எதிராக வந்தாலும் அதை துடைத்து எரியுங்கள்.
விலையில்லா உணவகம், ரொட்டி பால் முட்டை திட்டம், தளபதி பயிலகம், நூலகம் என அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்பட வேண்டும். கட்சியின் பெயரை டெல்லியில் பதிவு செய்து வந்த நொடியே கட்சியின் பெயர் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. அதுதான் தலைவர் விஜயின் பலம். 2026 இல் தமிழக முதல்வர் யார் என்று பொதுமக்கள் தற்போது யோசித்து வருகின்றனர். எல்லோருடைய கருத்துக்கணிப்பில் 65 சதவீதம் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் இருக்கிறது. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்க்க வேண்டும்.
கட்சியின் தலைவர் விரைவில் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி கொடி நிறங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.இனிமேல் கட்சியின் முக்கிய தகவல்களை முழுவதும் தலைவர் தான் அறிவிப்பார். முதலில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளில் பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமங்களுக்கு சென்று அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.உங்கள் பணியை முடித்துவிட்டு தினந்தோறும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கட்சிக்காக உழைக்க வேண்டும்
2026 இல் தமிழகத்தின் முதல்வராக தலைவர் விஜய் யை உட்கார வைக்க வேண்டும். அதற்கான சேவைகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.தேர்தல் நேரத்தில் மட்டும் வைக்கக்கூடாது. தற்போது இருந்தே நாம் உழைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.