விமான விபத்திற்கு ஒபாமாவும், ஜோ பைடனுமே காரணம் - அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு !
அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் கடந்த புதன்கிழமை (ஜன.29) இரவு 64 பயணிகளுடன் தரையிறங்கிய சிறிய ரக பயணிகள் விமானமும், 3 வீரர்களுடன் வந்த ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளானது. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் (Ronald Regan Washington National Airport) அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.
இந்த விபத்தின் போது விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்த நிலையில் தற்போது வரை மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு பகுதியில் பணியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 24 மணிநேரம் கடந்தும் யாரும் உயிருடன் மீட்கப்படாததால் அனைவரும் உயிரிழந்திருக்ககூடும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விமான விபத்து குறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "ஒபாமாவும் பைடனும் குடிமக்களின் பாதுகாப்புக்கு பதிலாக இடதுசாரி பன்முகத்தன்மை கொள்கைக்கு முன்னுரிமை அளித்தனர். இதனால் விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்த திறமையான ஊழியர்களை வெளியேற்றினர். 2016இல் நான் அதிபரானபோது விமானப் போக்குவரத்தின் தரத்தை அசாதாரணம் கொண்டதாக மாற்றினேன்.
அறிவுத்திறன் மற்றும் உளவியல் ரீதியில் மேம்பட்டவர்களை மட்டுமே விமான கட்டுப்பாட்டாளர்களாக தேர்ந்தெடுக்க அனுமதித்தேன். ஆனால், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முன்பைவிட தரம் குறைவானதாக விமானத் துறையை மாற்றினார். இந்த விமான விபத்தானது பயணிகள் விமானத்தின் பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் சென்றதால் தான் நடந்தது. இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.