For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்" - தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

01:34 PM Jun 03, 2024 IST | Web Editor
 வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்    தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
Advertisement

"வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக” டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஸ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறியதாவது.

” கடந்த மார்ச் 16ம் தேதி நாம் சந்தித்தோம்.  இப்போது வாக்கு எண்ணிக்கை சமயத்தில் சந்திக்கிறோம்.  தேர்தலில் போது நடந்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான விவகாரங்கள் குறித்து விரிவாக பார்க்க போகிறோம்.  நடந்து முடிந்த தேர்தலில் 642 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.  இது ஒரு உலக சாதனை.  இது 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம் ஆகும்.

மக்களவை வாக்குப்பதிவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளொம்.  பெண்கள்,  இளைஞர்கள் என அனைவரும் இந்த தேர்தல் திருவிழாவில் கலந்து கொண்டு அதை வெற்றிகரமாக்கியுள்ளனர்.  வாக்குப்பதிவிற்காக 135 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதே போல 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.  1692 முறை வான்வெளியில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது.  68,793 கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டன. கிட்டத்தட்ட 1.5 கோடி தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு 540 இடங்களில் மறுவாக்கு பதிவு நடந்த நிலையில் இந்த முறை 39 இடங்களில் மட்டுமே மறுவாக்கு பதிவு நடந்துள்ளது.  இது மிகப்பெரிய சாதனை.  அதிலும் அருணாச்சலப் பிரதேசம்,  மணிப்பூர் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.  அதற்கு காரணம் கடுமையான மழையாகும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாக வாக்குப்பதிவாகியுள்ளது.  மணிப்பூர் மாநிலத்தில் எந்த பெரிய கலவரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  அதேபோல ஷோம்பென் பழங்குடியின மக்கள் முதன்முறையாக வாக்களித்துள்ளனர்.  பல வர்த்தக நிறுவனங்கள் தாங்களாகவே இலவசமாக தேர்தல் குறித்த விளம்பரங்களை செய்து கொடுத்தனர்.

நக்சல் பாதிப்புகள் இருக்கக்கூடிய மணிப்பூர்,  மேற்கு வங்கம்,  ஜார்க்கண்ட் உள்ளிட்ட வன்முறை நிறைந்த பகுதிகளில் கூட அதிக வன்முறை இல்லாமல் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.  பணப்பட்டுவாடா,  இலவச பொருட்கள் பட்டுவாடா உள்ளிட்டவை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டன.  4391 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டன.

ஹெலிகாப்டர் பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து முக்கிய தலைவர்களின் ஹெலிகாப்படர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  அவர்கள் மத்திய அமைச்சராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும்,  முதலமைச்சராகவும் யாராக இருந்திருக்கலாம் அவர்கள் அனைவரது ஹெலிகாப்டர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  சரியான முறையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என கட்சிகளை தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டோம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக பல அரசியல்கட்சி தலைவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.  பலருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  சரியாக செயல்படாத அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.  தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களில் 90% மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு முடித்துவைக்கப்பட்டுள்ளது.  போலி செய்திகளை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தனது சமூக வலைதள பக்கங்களின் மூலமாக முறியடித்தது.

வாக்கு எண்ணிக்கை :

வாக்கு எண்ணிக்கைக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  24 மணி நேரமும் சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்படும்.  தேர்தல் பார்வையாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.  படிவம் 17 சி வழங்கப்பட்டுள்ளது.  தேர்தல் முடிவுகளை அங்கு அமைக்கப்பட்ட தேர்தல் முகவர்களிடம் காட்டப்படும்

படிவம் 20ல் தேர்தல் பார்வையாளர் கையொப்பமிடுவார்.  வாக்கு எண்ணிக்கை அதிகாரியும் அங்கு இருப்பார்.  ஒவ்வொரு சுற்று முடிவுகளும் உடனுக்குடன் வெளியிடப்படும் இதன் விவரங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படும்.  ஐந்து வாக்குகள் ஒப்புகைச் சீட்டுடன் பொருத்தி பார்க்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும்

வாக்கு பதிவு எந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட் செயல்பாடுகள் சிசிடிவி கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படும் நேரம் சரிபார்க்கப்படும். எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறது என்ற விவரங்கள் முகவர்களுக்கு தெரிவிக்கப்படும். இவை வாக்கு எண்ணிக்கை அதிகாரியாலும் சரி பார்க்கப்படும் கட்சியின் பெயர் வாக்காளர் பெயர் என்ன அத்தனையும் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

 

Tags :
Advertisement