அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் துவக்கம்!
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக, மதுரை மாநகராட்சி சார்பாக 25 லட்சத்து 47 ஆயிரத்துக்கு ஒப்பந்த புள்ளியானது வெளியிடப்பட்டது. மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் முகூர்த்த கால் நடப்பட்டது. இந்நிலையில், போட்டிக்காக கால்நடை பராமரிப்பு சார்பாக தடுப்பு வேலி அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து விழா, குடிநீர் மேடை அமைப்பது, சாலை இருபுறமும் பார்வையாளர்களை தடுக்கும் வேலி, சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.