For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரேமம் படம் ஆல் டைம் ஃபேவரைட்!! படம் எடுப்பதை நிறுத்த வேண்டாம் -சுதா கொங்கரா வேண்டுகோள்

06:33 PM Oct 31, 2023 IST | Web Editor
பிரேமம் படம் ஆல் டைம் ஃபேவரைட்   படம் எடுப்பதை நிறுத்த வேண்டாம்  சுதா கொங்கரா வேண்டுகோள்
Advertisement

சுதா கொங்கரா, தான் மிகவும் தாழ்ந்த நிலையிலிருந்தபோது தன்னை ஊக்கப்படுத்திய படம் பிரேமம் என்றும், அந்த படத்தை தான் பலமுறை பார்த்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தனது திரைப்படங்கள் மூலம் இளைய தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்தவர் பிரபல இயக்குநரான அல்ஃபோன்ஸ் புத்திரன். முதலில் குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களை இயக்கி வெளியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2013 ஆம் ஆண்டு ‘நேரம்’ என்ற பெயரில் தனது முதல் திரைப்படத்தை இயக்கினார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

2015 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘பிரேமம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, மலையாள திரையுலகில் அதிக வசூலை ஈட்டிய படங்களுள் ஒன்றாக திகழ்ந்தது.

அதன் பின்னர் அவியல் மற்றும் கோல்டு என இரு திரைப்படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், இறுதியாக அவர் இயக்கி வந்த கிஃப்ட் என பெயரிடப்பட்ட திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இன்ஸ்டாவின் திரெட் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தான் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போதுதான் இந்த விவரம் தனக்கு தெரியவந்துள்ளதால் இனி திரைப்படங்களை இயக்குவதில்லை என முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது பிரச்னை மற்றவர்களை பாதித்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கனத்த மனதுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும் திரைத்துறையில் இருந்து முற்றிலுமாக விலகிச் செல்ல மனமில்லை என்பதால், பழையபடி குறும்படங்கள், ஆல்பம் பாடல்களை எடுத்து ஓடிடி மூலம் வெளியிடுவதில் கவனம் செலுத்தவுள்ளதாக அந்த பதிவில் அல்ஃபோன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

ஆட்டிசம் அத்தனை பயங்கர நோயா என்று கேட்டால், அது நோயல்ல நரம்பியல் ரீதியிலான ஒரு குறைபாடு மட்டுமே என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். பெரும்பாலும் குழைந்தகளே இந்த குறைபாடால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  ஆட்டிசத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு பேசும் திறனில் பிரச்னை இருப்பதால் சமூகத்தில் மற்றவர்களுடன் பழகும் முறை மாறுபட்டு காணப்படும். காரணமின்றி அழுவது, சிரிப்பது, கூச்சலிடுவது, கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்ப்பது, தனிமையை விரும்புவது என ஒவ்வொருவருக்கும் அவர்களது நிலைக்கு ஏற்றார்போல் உணர்வுகள் வேறுபட்டிருக்கும்.

வளர்சிதை மாற்றக்குறைபாடு காரணமாகவும், மரபு வழியாகவும்கூட இந்த ஆட்டிசம் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிற மரபணுக்களின் சீரற்ற நிலை, சுற்றுச்சூழல் மாசு, காற்று மற்றும் மண்ணில் கலக்கும் நச்சு ரசாயனங்கள் மூலமும் இந்த குறைபாடு ஏற்படலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது ஒரு குறைபாடுதான் என்பதால் Occupational Therapy, Speech Therapy போன்ற பலவகையான தெரபி சிகிச்சிக்கைகளை தொடர்ந்து கொடுப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என மருத்துவ வல்லுனர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன் பதிவைக் கண்ட பிரபல நடிகர் உட்பட அவரது ரசிகர்கள் பலரும், முறையான மருத்துவ சிகிச்சை பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மீண்டும் திரைப்படங்களை இயக்க வருமாறு இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்தவகையில்,  இறுதிச் சுற்று, சூரரைப் போற்று படங்களின் இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் பதிவில், "டியர் அல்போன்ஸ் புத்திரன், நான் உங்களது சினிமாக்களை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன். பிரேமம் படம் எனக்கு எப்போதும் பிடித்த படங்களின் வரிசையில் இருக்கும். நான் சோர்வாக இருக்கும்போதெல்லாம் என்னை உயிர்ப்புடன் வைக்கும் படமும் அதுவே. நான் அந்தப் படத்தினை பலமுறை தொடர்ந்து பார்த்துள்ளேன்.

காதலில் இருப்பது என்ற யோசனையின் மீது மீண்டும் காதல் கொள்ளச் செய்கிறது. தயவுசெய்து எந்த வடிவிலாவது சினிமாவை தொடருங்கள்; நான் ரசித்துக் கொள்கிறேன். அன்புடன் சுதா" எனக் கூறியுள்ளார்.

Advertisement