நிலவின் அதிர்வுகளை கண்டறிந்த #Chandrayaan - 3ன் பிரக்யான் ரோவர்!
நிலவின் தென் துருவப் பகுதியில் ஏற்பட்ட 250க்கும் மேற்பட்ட அதிர்வுகளை சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் பதிவு செய்துள்ளது.
நிலவில் தென்துருவப் பகுதியில் ஏற்பட்ட 250க்கும் மேற்பட்ட அதிர்வுகளை சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் பதிவு செய்துள்ளது. இதுபோன்ற அதிர்வுகளை பிரக்யான் ரோவர் பதிவு செய்திருப்பது இதுவே முதல்முறை. இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் 200 அதிர்வுகள் பிரக்யான் மற்றும் பிற கருவிகளால் ஏற்பட்டது எனவும், 50 அதிர்வுகள் அவற்றிற்கு தொடர்பில்லாதது எனவும் தெரிவித்துள்ளனர்.
சந்திரயான் 3ன் பிரக்யான் ரோவரின் நடமாட்டத்துக்கும், இந்த 50 அதிர்வுகளுக்கும் தொடர்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. நிலவின் தென்துருவப் பகுதியில் அதிர்வுகள் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை. அதிகபட்மாக ஒரு அதிர்வு 14 நிமிடங்கள் நீடித்ததாகவும், ஓரிரு வினாடிகள் வரை நீடித்த அதிர்வுகள் கணக்கில் கொள்ளவில்லை எனவும் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்த பிரக்யான் ரோவர், நிலவின் வெப்பநிலை, மண்ணின் தன்மை உள்ளிட்ட ஆய்வுகளை 14 நாள்கள் மேற்கொண்டது.
விக்ரம் லேண்டரில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் ஃபார் லூனார் சிஸ்மிக் ஆக்டிவிட்டி(ஐஎல்எஸ்ஏ) என்ற கருவி மூலம் தரையிறங்கிய இடத்தில் தெற்கில் 69.37 டிகிரி மற்றும் கிழக்கில் 32.32 டிகிரியில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 24, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் 190 மணிநேரம் இந்த கருவி செயல்பட்டுள்ளது. இதன் தரவுகளை இஸ்ரோ குழுவினர் பகுப்பாய்வு செய்து தற்போது வெளியிட்டுள்ளனர்.