"தமிழக அரசு போர்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி!
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "திருவாரூர் மாவட்டத்தில் குருவை சாகுபடி அறுவடை செய்யப்பட்டு விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை நேரடியாக கொள்முதல் செய்யப்படவில்லை. அதனால் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நெல்மணிகளை சாலைகளில் கொட்டி 20 நாட்கள் காவல் காத்துள்ளனர். இப்போது மழைக்காலம் என்பதால் நெல்மணிகள் எல்லாம் முளைத்து விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் திறந்த வெளியில் குவித்து வைத்திருந்த நெல்மணிகள் எல்லாம் மழையில் முளைத்துள்ளதால் விவசாயிகள் வேதனையுடன் இருப்பதாக தெரிவித்தனர். காட்டூரில் மட்டும் 5000 நெல் மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த பகுதியில் விவசாயிகள் சுமார் 4000 மூட்டை நெல்மணிகளை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வடூரில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 8000 மூட்டைகள் இருப்பு வைத்துள்ளனர். அதையும் அங்கிருந்து குடோனுக்கு எடுத்துச் செல்லவில்லை. இன்னும் விவசாயிகளிடமிருந்து 7,500 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் உள்ளனர். இது குறித்து வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கும் நெல்மணிகளை தமிழக அரசு போர்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரமே இந்த கொள்முதலில் தான் உள்ளது.
விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் உற்பத்தி செலவு கூடுதலாக உள்ள கணக்கிலேயே குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இதுவரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.
தொடர்மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முளைத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 30 லட்சம் மூட்டைகள் கொள்முதல் செய்யவில்லை. இந்த அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப் பெறவில்லை என்பது தான் உண்மை. உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை கூட விற்க முடியாத ஒரு அவல நிலை இந்த ஆட்சியில் தான் காணப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றுதெரிவித்துள்ளார்.