For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மூங்கில் குச்சி பயிற்சி To ஒலிம்பிக் தங்கம்!  யார் இந்த அர்ஷத் நதீம்?

05:14 PM Aug 09, 2024 IST | Web Editor
மூங்கில் குச்சி பயிற்சி to ஒலிம்பிக் தங்கம்   யார் இந்த அர்ஷத் நதீம்
Advertisement

மூங்கில் குச்சியை ஈட்டியாக கொண்டு பயிற்சியை தொடங்கி ஒலிம்பிக்கில் சாதனை படைத்து தங்கம் வென்றிருக்கிறார் அர்ஷத் நதீம். அவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 

Advertisement

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக்கில் அதிகப்பட்ச தூரத்துக்கு எறிந்த வீரர் என்ற சாதனையுடன் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்கான பாகிஸ்தானின் 40 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவுகட்டினார் அர்ஷத் நதீம்.

மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர். இதுவே அவரது ஒலிம்பிக் பெஸ்ட் என்பது கவனிக்கத்தக்கது. 88.54 மீட்டர் தூரம் வீசிய கிரனேடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ராவின் வெற்றிக்கு ஈடாக கொண்டாடப்பட வேண்டியது அர்ஷத் நதீம் வெற்றியும். ஏனென்றால், கடந்த 32 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத பாகிஸ்தானுக்கு உற்சாகத்தை அளிக்கும் வெற்றி அது.

யார் இந்த அர்ஷத் நதீம்?

நதீமின் தந்தை முஹம்மது அஷ்ரஃப் ஒரு கட்டுமானத் தொழிலாளி. ஏழ்மையான குடும்பம் தான். ஆனால் நம்பிக்கைக்கு ஒருபோதும் குறைவில்லை. ஆரம்பத்தில் கிரிக்கெட் மீதே அர்ஷத் நதீமுக்கும் ஆர்வம். 2010ல் தனது தந்தையிடம் கிரிக்கெட் பேட் வாங்கித்தர சொல்லி வற்புறுத்தியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து தடகளத்துக்கு மாறியதன் பின்னணியில் அவரின் இரண்டு சகோதரர்களே உள்ளனர். அர்ஷத்தின் சகோதரர்கள் தான் அவரை தடகளத்தில் கவனம் செலுத்த சொல்லியுள்ளனர்.

அதன்படி, பள்ளியில் வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்க தொடங்கினார். லாகூரை அடுத்த ஓர் சிறிய கிராமம் தான் அர்ஷத் நதீமின் ஊர். இந்த ஊரின் சிறிய பள்ளியில் இருந்தது மொத்தம் இரண்டே விளையாட்டு வீரர்கள். அதில் அர்ஷத்தும் ஒருவர். இவர் மற்ற நாட்டு வீரர்களை போன்று தேவையான உபகரணங்களை கொண்டு பயிற்சியை தொடங்கவில்லை. கிராமத்தில் உள்ள முதியவரிடம் மூங்கில் குச்சி ஒன்றை கொண்டுவர செய்து, அதனை ஈட்டி போல் தயார் செய்து, அவற்றை வீசி தான் ஈட்டி எறிதல் போட்டியில் பயிற்சிபெற தொடங்கினார்.

அப்படி ஈட்டி எறிதல் பயிற்சியை தொடங்கிய அர்ஷத்துக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் ரஷீத் அஹ்மத் சாகி என்பவரே, முழங்கைகளை எப்படி பயன்படுத்தி எறிவது என்பது போன்ற ஈட்டி எறிதலின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். இந்த ஆரம்ப படிப்பினைகளால் ஈட்டி எறிதல் அர்ஷத்தின் பிடித்த விளையாட்டாக மாறியது.

2014ம் ஆண்டு ஒருநாள், ஐந்து முறை பாகிஸ்தான் தேசிய சாம்பியனும் பயிற்சியாளருமான சையத் ஹுசைன் புஹாரியை அர்ஷத் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சோதனை போட்டிக்காக பங்கேற்கும்போது சந்திக்க கிடைத்த வாய்ப்பு அது. அன்றைய தினம், அர்ஷத் நதீம் ஈட்டி எறிந்த தூரம், 60 மீட்டருக்கும் குறைவு. இதனால் போட்டியில் தேர்வாக முடியவில்லை. தோல்வியோடு வீடு திரும்ப அர்ஷத்துக்கு மனமில்லை. நேராக, பயிற்சியாளர் சையத் ஹுசைன் புஹாரியை சந்தித்து தோல்வியோடு வீடு திரும்ப மனமில்லாததை எடுத்துக்கூறிய அர்ஷத், 60 மீ தூரத்துக்கும் அதிகமாக ஈட்டி எறிய ஒருமாத அவகாசம் கேட்டு பயிற்சியை தீவிரப்படுத்தினார். சொன்னபடியே, ஒருமாதம் கழித்து அர்ஷத் ஈட்டி எரிந்து தூரம் 65 மீட்டர்.

அர்ஷத்தின் விடாமுயற்சியையும், அதற்காக அவர் கொடுத்த உழைப்பையும் பார்த்த பயிற்சியாளர் அவரின் திறமையை புரிந்துகொண்ட பயிற்சியாளர் சையத் அவரை WAPDA எனும் குழுவில் இணைத்து பயிற்சி அளித்தார். இந்த குழுவில் சேர்ந்த நான்கு மாதங்களுக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தானின் தேசிய போட்டியில் 70.46 மீ ஈட்டி எறிந்து பாகிஸ்தானுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தார். இதன்பின் அனைத்தும் வரலாறாக மாறியது.

  • 2016ல் கவுகாத்தியில் நடந்த SAFF விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் - 78.33 மீ
  • 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் - 80.75 மீ
  • 2021ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் 5வது - 84.62 மீ
  • 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் - 90.18 மீ
  • 2023 உலக சாம்பியன்ஷிப் வெள்ளி - 87.82 மீ

இதோ இப்போது ஒலிம்பிக்கில் பாகிஸ்தானின் முதல் தங்கப் பதக்கம், அதுவும் 92.27 மீ என்ற ஒலிம்பிக் சாதனையுடன். 1960ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் ஒன்று, 1988ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் ஒன்று என இரண்டு பதக்கங்களே வென்ற பாகிஸ்தானுக்கு அர்ஷத் வென்றுகொடுத்தது மூன்றாவது பதக்கமாகும்.

இந்நிலையில் தங்கம் வென்ற பாக்., வீரர் புதிய ஈட்டி வாங்கவே சிரமப்பட்டுள்ளதும், அவருக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா உதவியதும் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் புதிய ஈட்டியை வாங்க சிரமப்பட்டு, உதவி கோரி சமூக வலைதளத்தில் அர்ஷத் நதீம் பதிவிட்டுள்ளார். இதனையறிந்த நீரஜ் சோப்ரா, அவருக்கு உதவி செய்யும்படி பொதுமக்களிடம் கோரியிருந்தார். இதன்மூலம் கிடைத்த உதவிகளால் புதிய ஈட்டியை வாங்கிய அர்ஷத் நதீம், அதை வைத்து ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

Tags :
Advertisement