ஈக்வடாரில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சில கட்டடங்கள் சேதமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஈக்வடாரின் எஸ்மரால்டாஸ் நகரத்திலிருந்து 20.9 கி.மீ. வடகிழக்கே, பசிபிக் பெருங்கடல் பகுதியில் பூமிக்கு 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் கடற்கரை பகுதிகளுக்கு அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அந்த எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது. புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயம், 'நெருப்பு வளையம்' என்றழைக்கப்படும் பகுதியில் ஈக்வடார் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.