"சென்னையில் காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் " - மின்சார வாரியம் அறிவிப்பு!
"சென்னையில் காலை 11மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் என வழங்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை, விமான சேவை அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே இன்று மிக்ஜாம் புயல் கரையை கடக்கிறது. இதனால் நாளை அதிகாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மிக்ஜாம் சென்னையில் இருந்து 210கிமீ வடதிசை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு 20 கி மீ வடக்கு -வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இன்று காலை ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே, பாபட்லாவிற்கு அருகே, கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பல இடங்களில் தேங்கிய மழை நீர் வடிந்து வருவதால் சென்னையில் படிப்படியாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இன்னும் ஓரிரு மணிநேரங்களில் சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..
சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு. SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு பொன்னியம்மன் நகர்,
சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள்
சென்னை வடக்கு மின் CMBTT, ICF. இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூ கொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை தெற்கு 1 மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.” என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.