கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
கூலி உயர்வு, மின் கட்டண குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகள் முடங்கியுள்ள நிலையில்,
நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மின் கட்டணம், கட்டட வாடகை, உதிரி பாகங்கள் மற்றும் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், 12 ஆண்டுகளுக்கு முன் கடைசியாக கூலி உயர்வு வழங்கப்பட்டதாகவும் விசைத்தறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விசைத்தறியாளர்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகளில், முத்தரப்பு
பேச்சுவார்த்தை மூலம் மின் கட்டண உயர்வுக்கு தீர்வு காண வேண்டும், கூலி
உயர்வுக்கு சட்டப்பூர்வ நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் ஆகியவை அடங்கும்.
இந்த வேலை நிறுத்தம் ஜவுளி உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த தொழில்களை கடுமையாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் பூபதி தலைமையில் சோமனூரில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் உடனடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.