தள்ளி போகிறதா #TVK மாநாடு? விஜய் அவசர ஆலோசனை!
தவெக முதல் மாநாட்டிற்கான தேதி மிக குறுகிய காலமாக இருப்பதால் மாநாட்டை உரிய தேதியில் நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கட்சியின் முதல் மாநாட்டிற்கான வேலைபாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாநாடு நடத்த அனுமதி அளிப்பதற்கு முன்னதாக, மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகளை காவல்துறை தவெக கட்சியினர் முன்வைத்தனர். இந்த கேள்விகளுக்கு கடந்த 6ம் தேதி விஜய் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதனிடையே, காவல்துறை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதன்படி இந்த மாநாடு ஏற்கனவே அறிவித்த செப். 23-ம் தேதியில் மாற்றம் இன்றி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவு செய்யப்பட்ட கட்சியாகப் பங்கு பெற இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதாக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் தவெக தலைவர் விஜயின் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, மாநாட்டு மேடைக்கான டிசைன்கள், கிராஃபிக் மூலம் வரைபடமாக வரைந்து தவெக தலைவர் விஜயிடம் அனுமதி பெறப்பட்டது.
தொடர்ந்து, மேடை எப்படி இருக்கவேண்டும், அதன் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என ப்ளூபிரிண்ட் போடப்பட்டு சினிமா கலை இயக்குநருக்கு வழங்கப்பட்டது. மாநாடு மேடை மிகப் பிரம்மாண்டமாக அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதே நேரத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி என்பது குறுகிய காலமாக இருப்பதால் மாநாட்டை உரிய தேதியில் நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.