ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு - ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நீட் முதுநிலை தேர்வு வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான இடங்கள் நீட் முதுநிலை தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது.
எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு 2024-25 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 259 நகரங்களில் ஜூன் 23-ம் தேதி நடைபெற இருந்தது.
இந்நிலையில் அதற்கு முந்தைய நாள் (ஜூன் 22) இரவு திடீரென நீட் - முதுநிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சில போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவத் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நீட் முதுநிலை நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் முதுநிலை நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் நீட் முதுநிலை தேர்வு, காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.