பெற்றோர் உறவு குறித்த கருத்து - எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மன்னிப்பு கோரினார் பிரபல யூடியூபர்!
மும்பையை சேர்ந்த பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா, 'இந்தியாஸ் காட் லேடன்ட்' என்ற யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்று நகைச்சுவை என்ற பெயரில் “பெற்றோரின் உறவு” குறித்து தவறாக பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் மீதும் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
இதற்கிடையில் இது குறித்து மகாராஷ்ரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், “ சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து கேள்விப்பட்டேன். அதை இன்னும் பார்க்கவில்லை. அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது, ஆனால் மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. அனைவருக்கும் வரம்புகள் உள்ளன, யாராவது அவற்றை மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசி இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனூங்கோ, யூடியூப் இந்தியா பொதுக் கொள்கைத் தலைவர் மீரா சாட்டுக்கு இன்று(பிப்.10) கடிதம் எழுதியுள்ளார். அதில் “யூடியூபர் அல்லாபாடியா பேசிய அந்த குறிப்பிட்ட எபிசோடை யூடியூபிலிருந்து அகற்ற அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றுவதற்கு முன், சேனல் மற்றும் குறிப்பிட்ட வீடியோக்களின் விவரங்களையும் காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை இந்தக் கடிதம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் யூடியூபர் அல்லாபாடியா மன்னிப்பு கோரி ஒரு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “ அந்த நிகழ்ச்சியில் நான் அப்படி பேசியிருக்க கூடாது. எனது கருத்து பொருத்தமற்றது மட்டுமல்ல, அதில் நகைச்சுவையும் இல்லை. இதை நான் நியாயப்படுத்தி பேசவோ, காரணத்தை கூறவோ மாட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய தவறை உணர்ந்துவிட்டேன்” என்று பேசியுள்ளார்.