கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் கடந்த மார்ச் முதல் வாரத்தில் அவர் அபாய நிலைய தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர், “போப் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். எனினும் அவர் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதனையடுத்து, ஐந்து வார கால சிகிச்சைக்கு பிறகு மார்ச் 23ம் தேதி போப் பிரான்சிஸ் வீடு திரும்பினர். இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் இன்று காலை 7:35 மணியளவில் தனது 88 வயதில் காலமானார். இதனை வாடிகன் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.