For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போப் பிரான்சிஸ் மறைவு - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தவர் போப் பிரான்சிஸ் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
04:52 PM Apr 21, 2025 IST | Web Editor
போப் பிரான்சிஸ் மறைவு   பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
Advertisement

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

Advertisement

உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் கடந்த மார்ச் முதல் வாரத்தில் அவர் அபாய நிலைய தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர், “போப் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்.

எனினும் அவர் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும்” எனக் கூறினார். இதனையடுத்து, ஐந்து வார கால சிகிச்சைக்கு பிறகு மார்ச் 23ம் தேதி போப் பிரான்சிஸ் வீடு திரும்பினர். இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் இன்று காலை 7:35 மணியளவில் தனது 88 வயதில் காலமானார். இதனை வாடிகன் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

"புனித திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களால் கருணை, பணிவு மற்றும் ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.

சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார்.

அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன், விரிவான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement