"ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
ஏழைகளுக்கு குறைந்த விலையில் தேவையான அளவு உணவுப்பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடு முழுவதும் சமுதாய சமையல்கூடம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் சில ஆண்டுகளாகவே நடந்து வந்த நிலையில், அனைத்து மாநில அரசுகளிடமும் ஆலோசனை செய்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பின்னர் நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையும் படியுங்கள் : அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்கள் வரும் 26ம் தேதி திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
அதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் மாநிலங்கள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பது அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.
இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது :
"மேற்கூறிய உத்தரவை தவிர கூடுதலாக எந்த வித உத்தரவை பிறப்பிக்க தேவையில்லை என கருதுகிறோம். மேலும் சமூதாய சமையல்கூடங்கள் தேவை என்பது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் கூற விரும்பவில்லை. அதேவேளையில் உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற உணவு உத்தரவாத திட்டங்களை மாநிலங்கள் அமல்படுத்துவதை அவர்களின் விருப்பத்துக்கு அல்லது முடிவுக்கு விட்டுவிடுகிறோம்"
இவ்வாறு கூறி வழக்கினை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
குடிமக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்வது என்பது அரசுகளின் அடிப்படை கடமை என இந்த வழக்கின் விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.