For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி! உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!

04:09 PM Mar 22, 2024 IST | Web Editor
மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி  உயர்கல்வித்துறை ஒதுக்கீடு
Advertisement

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி,  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்கோவிலூர் எம்.எல்.ஏ பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயல்கல்வித்துறை அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை,  ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து,  அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.  இதை எதிர்த்து,  பொன்முடி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.  இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதத்தை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவருடைய தகுதி நீக்கம் ரத்தாகி மீண்டும் திருக்கோவிலூர் எம்,எல்,ஏ. ஆனார்.  இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதலமைச்சர் பரிந்துரைத்தார்.  ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.

ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இவ்வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழக ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பிய தலைமை நீதிபதி,  ஆளுநர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக கண்டனம் தெரிவித்தார்.

மேலும் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல.  தமிழ்நாடு ஆளுநர் உச்சநீதிமன்றத்தை அவமதித்துள்ளார்.  பொன்முடியை குற்றவாளி என தீர்மானித்த உத்தரவை உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நிறுத்தி வைத்த பின்,  அவர் குற்றவாளி தான் என ஆளுநர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது.  ஆளுநருக்கு இரவு முழுவதும் காலக்கெடு விதிக்கிறோம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் காட்டமாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து,  நேற்று மாலை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி,  மீண்டும் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார்.  இதனை அடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (22.03.2024) பிற்பகல் 3.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது.  மேலும்,  அமைச்சர் ராஜகண்ணப்பன்,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பார் என்றும்,  அமைச்சர் காந்தி கைத்தறித்துறையை கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement