திமுக - பாஜகவை மகாபாரதத்துடன் ஒப்பிட்டு பேசிய பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி!
சென்னை வானகரத்தில் பாஜக புதிய மாநிலத் தலைவர் அறிவிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் போன்றோர் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பாஜகவின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கர்நாடகா மற்றும் தமிழ்நாடு பாஜக தேசிய இணை பொறுப்பாளரும், ஆந்திர முன்னாள் எம்.எல்.ஏவுமான பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி,
“இந்நிகழ்ச்சி ஒரு தீபாவளி போல் உள்ளது. நாம் பாஜகவின் திருவிழாவை கொண்டாடுகிறோம். சென்னை வந்த அமித்ஷா அதிமுக - பாஜக கூட்டணியை உருவாக்கி உள்ளார். பாஜக ஒரு தர்ம கட்சி.
திமுக ஒரு அதர்ம கட்சி. ராவண கட்சி; கட்டப்பஞ்சாயத்து கட்சி; ஊழல் கட்சி. ஆனால் பாஜக அப்படி அல்ல. இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம். தமிழ்நாடு மக்களின் உள்ளத்தை நரேந்திர மோடி தலைமையில் வெல்வோம்.
நான் இன்று ஜெய் ஹனுமனிடம் வேண்டிக் கொண்டேன். நமது கட்சிக்கும், சக்தி வாய்ந்த சகோதரர்களும், ராமனான நயினார் நாகேந்திரனுக்கும், லட்சுமணனான அண்ணாமலைக்கும் பலத்தை அருள வேண்டியுள்ளேன்.
ஊழல், கட்டப்பஞ்சாயத்தின் முகமே திமுக. திமுக அமைச்சர்கள் சிறை செல்வதும், ஜாமின் பெறுவதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளனர். அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து இழிவாக பேசியுள்ளார். ஆனால் அமைச்சராக பதவியை தொடர்கிறார்.
அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை நீங்கள் மதித்தால் இப்போதே பொன்முடியை பதிவியிலிருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் வரும் 2026-ல் தமிழ்நாடு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இதனை மகாபாரதப் போருடன் நான் ஒப்பிடுகிறேன். பாஜகவினர் பாண்டவர்கள். துரியோதனனும், அர்ஜூனனும் இங்கு உள்ளனர். கிருஷ்ணர் ஆசிர்வதிக்கிறார். ஆனால் அந்தப் பக்கம் துச்சாதனன். அங்குள்ளவர்கள் அனைவரும் கௌரவர்கள். (துரியோதனன், அர்ஜூனன் ஒரே கூட்டணி என மாற்றிக் கூறினார். பின்னர் மாற்றினார்). மன்னித்து விடுங்கள் மாற்றி கூறிவிட்டேன். இந்தப் பக்கம் பீமன், அர்ஜூனன், அந்தப் பக்கம் துரியோதனன், துச்சாதனன். இந்தப் பக்கம் முழுவதும் தர்மம் நிறைந்துள்ளது.
கட்சியின் வளர்ச்சியில் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் திமுக அதனை உடைக்க பார்த்தது. அது அவர்களின் கனவு. நாங்கள் ஒருபோதும் அதற்கு வாய்ப்பு அளிக்க மாட்டோம். 2026 -தான் எங்கள் இலக்கு. அப்போது தமிழ்நாட்டு மக்களின் இலக்கை வெல்வோம். அதன்பின் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை அமைப்போம்” எனப் பேசினார்.