பொங்கலோ...பொங்கல்... கைம்பெண்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்!
சென்னை சைதாப்பேட்டை கோதா மேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், முதன்முறையாக கைம்பெண்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
சென்னை ,சைதாப்பேட்டை கோதா மேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மைதானத்தில் தமிழ்நாடு கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாடபட்டது. இதில் "கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்கள் இணைந்து வண்ணமிகு ஆடை அணிந்து, மஞ்சள் கொத்து, மாஇலை, கரும்பு, வைத்து, மண்பானையில் மஞ்சள், குங்குமம் பூ வைத்து பொங்கலோ பொங்கலென்று குலவையிட்டு விளக்கேற்றி பொங்கல் வைத்து வழிபட்டனர். முதல் முறையாக கைம்பெண்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் நல வாரிய உறுப்பினர் கல்யாணந்தி
சச்சிதானந்தம் கூறியதாவது;
பெண்கள் வளரும் போது, வண்ண உடைகள், வளையல், பூ போன்றவற்றை விரும்பி அணிந்து கொள்கிறார்கள். ஆனால், திருமணத்திற்கு பின் கணவன் இறந்தால் சமுதாயத்தில் கோவில் சார்ந்த விஷயங்களில் பெண்கள் திரைக்குப்பின் இருக்கும் வேலைகளிலே ஈடுபடுகின்றனர். மஞ்சள், குங்குமம், பூ போன்ற விஷயங்களில் முன்னிறுத்தப்படாமல் இருக்கிறார்கள். அதை உடைப்பதற்காகத்தான் இந்த புதுமையான சமத்துவ பொங்கல்.
பூவும், பொட்டும் அனைத்து பெண்களுக்கும் உரித்தானது தான். பெண்களுக்கு பெண்களே முட்டுக்கட்டை போட கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. அடுப்பு பற்ற வைத்து, விறகு வைத்து, முதல் அரிசி போட்டது என இன்று அனைத்தும் செய்தது கைம்பெண்கள் தான் என்றார்.
மேலும் இதுகுறித்து பேசிய கைம்பெண் ஒருவர்,
பூ, வளையல், பொட்டு எல்லாம் பிறந்ததிலிருந்தே பயன்படுத்தி வருபவை. கணவர்
இறந்த உடன் ஏன் அனைத்தையும் நீக்க வேண்டும். பிற்போக்கு தனத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விட்டு, கணவரை இழந்த பின்னும் அனைவருக்கும் சமமாக இந்த சமூகத்தில் பெண்கள் வாழ வேண்டும். கோவிலை சுத்தம் செய்வோம், பூஜை பொருட்களை சுத்தம் செய்து வைப்போம். ஆனால், விளக்கு ஏற்ற அனுமதிக்காத சமூகம் இது. அதே இடத்தில், விளக்கேற்றி, பொட்டு வைத்து, பொங்கல் வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.