பொங்கல் பண்டிகை - சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்...!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு கடந்த 2 நாட்களில் 8 லட்சம் பேர் பேருந்து மற்றும் ரயில்களில் புறப்பட்டு சென்றனர்.
பொங்கல் பண்டிகை இன்று போகியுடன் தொடங்கியது. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கலை விழாவை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். நீண்ட விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களும் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 12-ம் தேதி முதல் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கியநகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் நேற்று முன்தினம் 1.95 லட்சம் பேர் பயணித்தனர். நேற்று 1,071 வழக்கமான பேருந்துகள், 658 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இதையும் படியுங்கள் : சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
மேலும், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த 50 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேர் என மொத்தமாக 5 லட்சம் பேர் பேருந்துகளில் சொந்த ஊர் சென்றுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு சென்றுள்ளனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் பேருந்து, ரயில், விமானங்கள் மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.