பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - காவல் ஆய்வாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை பொள்ளாச்சி போலீசார் முதலில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில்
நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட 8 பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட
நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்துள்ளனர்.வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
முன்னதாக கோவை சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்தபோது, கைது செய்யப்பட்ட 9 பேரிடமும் அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் இன்று(ஏப்ரல்.09) நடைபெற்றது. அரசுத்தரப்பு குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் ஆதாரங்கள் சமர்ப்பிக்க எதிர்த்தரப்பிற்காக வாய்ப்பாக இன்றைய தினம் விசாரணை நடந்தது. அப்போது, 5வதாக குற்றச்சாட்டப்பட்ட மணிவண்ணன், 6 வதாக குற்றச்சாட்டப்பட்ட பாபு ஆகியோர் தரப்பில் 2 சாட்சிகள் விசாரணை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யதனர். அதில் “பொள்ளாச்சி பாலியல் வழக்குடன் தொடர்புடைய அடிதடி வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் மருத்துவமனையின் அறிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்களை விசாரிக்க வேண்டும்” என கோரிக்கை இருந்தது.
தொடர்ந்து கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சம்மந்தப்பட்ட அடிதடி வழக்கின் ஆவணங்களை ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த அடிதடி வழக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.