“தமிழ்நாடு தனித்துவமாகத் திகழ அரசியல் பேராசான் அண்ணா தான் காரணம்” - #EPS புகழாரம்!
‘பேரறிஞர்’ அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் இன்று (செப். 15) கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு. பொன்முடி, த.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“இந்திய நாட்டின் மாநில அரசியல் களங்களில் இன்றுவரை தமிழ்நாடு தனித்துவமாகத் திகழக் காரணம் நம் யுகத்திற்கான அரசியல் பாதையை வகுத்துத் தந்த அரசியல் பேராசான் அண்ணா தான் என்றால் மிகையாகாது. "தமிழ்நாடு" என்ற பெருமிதத்தோடு சொல்லும் போதெல்லாம் நம் நினைவில் வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை தீபம் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் காண அண்ணா_வழியில்_அஇஅதிமுக ஓயாது உழைக்க உறுதியேற்போம். அண்ணா நாமம் வாழ்க!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.