விமான விபத்துகளில் உயிரிழந்த உலக தலைவர்கள்!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்தை அடுத்து, உலகளவில் விமான விபத்துகளில் பலியான அரசியல் தலைவர்கள் பற்றி பார்க்கலாம்....
மேற்காசிய நாடான ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் சென்றார். அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார்.
அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன், மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர். அப்போது, அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பயணம் மேற்கொண்ட பல அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இதுபோல, உலகின் பல முக்கிய தலைவர்கள் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். அது பற்றிய விவரம் பின்வருமாறு :
- சிலி நாட்டின் இரு முறை அதிபர் பதவி வகித்த செபாஸ்டியன் பினேரா கடந்த பிப்ரவரி 6ம் தேதி தெற்கு சிலியில் சூறாவளியில் சிக்கிய இவரது ஹெலிகாப்டர் விழுந்ததில் உயிரிழந்தார்.
- 1988ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி, பாகிஸ்தானின் 6-வது அதிபர் முகம்மது ஜியா-உல்- ஹக், பஹவல்பூரில் சி-130 ஹெர்குலஸ் ரக விமானப்படை விமானத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
- 1987ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி, லெபனான் முன்னாள் பிரதமர் ரஷீத் கராமி, பயணம் செய்த ஹெலிகாப்டரில் வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார்.
- 1986ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி மொஸாம்பிக் அதிபர் சமோரா மச்செல், இரவு விமான பயணத்தை தவிர்க்க பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கையை மீறி பயணம் மேற்கொண்டபோது தென்னாப்பிரிக்க எல்லையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
- 1967ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி, பிரேஸில் முன்னாள் அதிபர் ஹம்பெர்டோ டி அலெங்கார் கேஸ்டெலோ பிரான்கோ, பயணம் செய்த சிறிய விமானத்தின் வால் பகுதியில் பிரேஸில் விமானப்படை விமானம் உரசி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
- 1958ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, பிரேஸில் முன்னாள் அதிபர் நீரஸ் ரமோஸ் பயணம் செய்த விமானம், பரனா மாகாணத்தில் உள்ள கரிட்டிபா அஃபோன்சா பெனா சர்வதேச விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
- 1966ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ஈராக்கின் 2- வது அதிபராக இருந்த அப்துல் சலாம் ஆரிஃப், பாஸ்ரா அருகே பயணம் செய்த விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
- 1957ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபராக இருந்த ரமோன் மகசேசே, அமெரிக்காவில் இருந்து மணிலாவுக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருக்கையில், பினதுபோ' மலைச்சிகரத்தில் இவரது விமானம் மோதியதில் உயிரிழந்தார்.
இதையும் படியுங்கள் : சென்னையில் சாரல் மழை! – குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!
- 1936ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி, ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் அர்விட் லிண்ட்மேன், இங்கிலாந்தின் குரோய்டன் விமான நிலையத்துக்கு அருகே பயணம் செய்த டக்ளஸ் டிசி-2 ரக விமானம் அடர் பனியில் சிக்கி விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தார்.