உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதியில் ஈடுபட்டதாக போலந்து நாட்டவர் கைது!
உக்ரைன் அதிபர் வோலோடுமீர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய ரஷ்ய உளவுத் துறையுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக போலந்தை சேர்ந்த ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜெர்மனியிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இரு ரஷியர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், போலந்திலும் அதே போன்றதொரு குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலந்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய உளவுத்துறையுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக போலந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;
உக்ரைன் எல்லையையொட்டி, தென்கிழக்கு போலந்தில் அமைந்துள்ள ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையம் அமெரிக்க படையினரின் பாதுகாப்பில் உள்ளது.
உக்ரைனுக்கு அளிக்கப்படும் சர்வதேச ஆயுத மற்றும் நிவாரணப் பொருள்கள் இந்த விமான நிலையம் வழியாகத்தான் அனுப்பப்படுகின்றன.
அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உக்ரைன் தலைவர்கள் நாட்டிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்குச் செல்ல இந்த விமான நிலையத்தை அடிக்கடி பயன்படுத்திவருகின்றனர்.