மதுபோதையில் விபத்து... மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்ட தலைமைக் காவலர்!
சென்னை தரமணி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் செந்தில் (40). இவர் ஆலந்தூரில் உள்ள காவல் குடியிருப்பில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் நேற்று மதுவின்கரை மேம்பாலத்தில் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவரின் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த முருகேசன் (54) என்பவர் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் முருகேசனுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றர்.
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய செந்தில் அங்கிருந்து நிற்காமல் சென்றார். இதனால், கோபமடைந்த மற்ற வாகன ஓட்டினர் அவரின் காரை துரத்திச் சென்றனர். தொடர்ந்து, கிண்டி கத்திபாரா சந்திப்பு அருகே அவரை மடக்கி பிடித்தனர். மேலும், நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து அவரைக் கைது செய்தது. மருத்துவ பரிசோதனையில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், காவல்துறையினர் எழுத்துப்பூர்வ உறுதிமொழியுடன் அவரை விடுவித்து, மறுநாள் காலை 11 மணிக்கு முறையான விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தினர். பின்னர் இன்று பணிக்கு சென்ற அவர், விசாரணைக்காக கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றார். இருப்பினும் காவல் நிலையத்தை அடைவதற்கு முன்பு, காலை 11 மணியளவில் அவர் தரமணி எம்ஆர்டிஎஸ் நிலையம் அருகே நின்றார். அங்கு, அவர் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி, பொதுமக்கள் முன்னிலையில் தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். பின்னர் செந்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். விபத்துக்குப் பிறகு பொதுமக்கள் அவரைத் துரத்திச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், இந்த வீடியோ பல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இதனால், செந்தில் மன உளைச்சலில் இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.